பிரசவத்திற்கு வந்தாள் மாமியார்…..!

பிரசவத்திற்கு - வந்தாள்மா மியார்

Last Updated on

“ஸ்ரீவித்யா! இங்கே கொஞ்சம் வா ” அப்பா கூப்பிட்டதும் எழுந்து சென்றாள். பிரசவத்திற்காக பிறந்தகத்திற்கு வந்திருக்கிறாள் மதுரையிலிருந்து சென்னைக்கு.

3 வருடங்கள் முன் இவளுக்கு சரணுடன் திருமணம் ஆனது. அவனுக்கு துபாயில் வேலை கிடைக்கவே இவளை மதுரையில் விட்டு அவன் மட்டும் சென்றிருக்கிறான் 6 மாதங்கள் முன். இதோ, இன்னும் ஒரு வாரத்தில் இவளுக்கு பிரசவத்திற்கு தேதி குறித்திருக்கிறார் டாக்டர்.

“என்னப்பா?” மெல்லிய குரலில் ஸ்ரீவித்யா கேட்டாள். “நான் வெளியே போகணும். அத்தை வந்திடுவா இன்னும் கொஞ்ச நேரத்திலே. நீ ஜாக்கிரதையாக இரு. எதாவது வேணும்னா போன் பண்ணு. சாப்பிடு. வயித்தை காயப் போடாதே” சொல்லிவிட்டு அப்பா வெளியே கிளம்பினார்.

பாவம் மனைவி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தனியாக இருந்து இவளையும் இவள் தம்பியையும் வளர்த்தார். இதோ, பிரசவ உதவிக்காக அவர் அக்கா வருகிறாள் திருச்சியிலேர்ந்து.

மதுரையில், ஸ்ரீவித்யா மாமியார் வீட்டில் கூட்டுக்குடும்பம். 3 பிள்ளைகள், ஒரு பெண். மூவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. கடைசியில் நாத்தனார். எப்பொழுதும் எதாவது தப்பு கண்டு பிடித்துக்கொண்டே இருப்பாள். யார் மீதாவது புகார்தான் அம்மாவிடம். அவள் சொல்வதைக் கேட்டு மாமியார் ஆடுவாள் மாட்டுப் பெண்களிடம்.

ஸ்ரீவித்யா கடைசி மாட்டுப்பெண். “பிரசவத்திற்கு இங்கேயே இருக்கட்டும். நங்கள் பார்த்துக்கறோம். அங்கே யார் இருக்கா? இங்கேயே விட்டுட்டு போங்கோ” கறாராக பேசினாள் மாமியார் சம்மந்தியிடம்.

ஸ்ரீவித்யா அப்பா சற்று தடுமாறினார், பின்பு “இல்ல சம்மந்திமா! அவளுக்கு இது தலை பிரசவம். எனக்கு ஒரே பெண். நான் பார்த்துக்கறேன். என் அக்கா வரேன்னு சொல்லிருக்கா” தயக்கத்தோடு பேசினார். “என்ன இது புதுசா இருக்கு. நாங்க இருக்கறச்சே, என்ன உங்க அக்கா? என்ன உங்க பொண்ணு ஏதாவது சொன்னாளா?” இழுத்தாள் மாமியார். ஸ்ரீவித்யாவிற்கு பக் என்றது.

“அதெல்லாம் இல்லை. எனக்கு ஆசை. அப்புறம் உங்கள் இஷ்டம்” என்று சொல்லி விட்டார் அப்பா.

பெரிய சம்மந்தி தன் மகளிடம் ” ஏய். நீ கிளம்பு என்னோடு. நீ என்ன இங்க உட்கார்ந்துண்டு இவளுக்கு செய்யறதுக்கா? மாப்பிள்ளை கிட்ட சொல்லி உன் குழந்தைகளோடு கிளம்பு.” அழுத்தமாய் கூறினாள். முதலில் எதிர்த்தாலும், “சரி நீ போயிட்டு வா” என்று கூறி விட்டாள் மாமியார்.

மூத்த மகன், மாட்டுப் பெண்ணிடம் கொஞ்சம் பயம்தான் அவருக்கு. இரண்டாம் மாட்டுப் பெண், தன் சித்தி பெண்ணிற்கு கல்யாணம் என்று மும்பை செல்ல ஆயத்தமானாள். மாமியார் உஷார் ஆகி விட்டாள். ஆனால் புலம்பல் ஆரம்பம். எல்லாம் ஸ்ரீவித்யவிடம்தான். “என்ன ஆளுக்காளு இங்க போறேன், அங்கே போறேன்னு? எல்லாம் என் தலை எழுத்து. வெளியே பார்கிறவா என்ன சொல்லுவா? தாய் இல்லா பொண்ணு அவளை இந்த மாமியார் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு அனுப்பிட்டானு? சரி. சரி. பார்த்துக்கலாம். என்னால் தனியா எல்லாம் இங்கே உன்னை வெச்சுண்டு ஒன்னும் செய்ய முடியாது” சொல்லிக்கொண்டே போனாள்.

ஸ்ரீவித்யா மனதிற்குள் சந்தோஷப் பட்டாள். ” அப்பாட.. எப்படியோ இங்கேர்ந்து தப்பிச்சோம்” ஸ்ரீவித்யா, அப்பா இருவரும் கிளம்பினர் சென்னைக்கு.

அத்தை வந்தாச்சு. ” வா அத்தை. எப்படி இருக்கே?” ஸ்ரீவித்யா வரவேற்றாள். “நீ எப்படி இருக்கே சொல்லு? ஏன் இவ்வளவு இளைச்சுட்டே? ஒழுங்கா சாப்பிடறியா இல்லையா? இந்தா கைமுறுக்கு சுத்தினேன், கொண்டு போய் உள்ளே வை.” சொல்லிவிட்டு குளிக்கசென்றாள். இரண்டு நாட்கள் சென்றன.

அத்தை வாய்க்கு ருசியாய் செய்து போட்டாள். ஆனால், ஸ்ரீவித்யாவிற்கு எதுவும் வாய்க்கு பிடிக்கவில்லை. பயம் வேறு. அன்று இரவே வலி எடுக்க ஆரம்பித்தது. அப்பா துடித்து விட்டார். பக்கத்தில் உள்ளவர் கூடி இருந்து ஆஸ்பத்ரியில் கொண்டு சேர்த்தனர். தகவல் கொடுத்தாயிற்று மதுரைக்கு.

போன் மேல் போன், மாமியாரிடமிருந்து. ” பத்திரமா பார்த்துக்கோங்கோ. இதோ நான் கிளம்பறேன்” சம்மந்தியிடம் சொன்னாள். ” அட இப்போ மணி 1.30 ராத்திரி” இவர் படபடத்தார்.

“இருந்தால் என்ன? பஸ் இருக்கு. நான் கிளம்பிடறேன். எனக்கு இருப்பு கொள்ளலே” மாமியார் சொல்லிவிட்டு கிளம்பினார். தனியாக. பெண்ணை வீட்டை பார்த்துக்க சொன்னாள்.

ஆஸ்பிடலில் சுகப் பிரசவம் முடியாதென்று முடிவாகி, சிசேரியன் செய்தனர். அழுதே விட்டார் அப்பா. அத்தை மனதுக்குள் “என்னடா இது? ஏதோ 15 நாள் இருந்து பார்த்துட்டு ஊருக்கு போகலாம்னு நினைத்தா இப்போ ஆப்பரேஷன்னா? அட நம்மால முடியாது தம்பி கிட்ட மெல்ல சொல்லிட வேண்டியது தான்” வெளியில் காட்டாமல் இருந்தாள்.

மணி 5.30 காலையில் குழந்தையின் அழுகை சப்தம் கேட்டது. அப்பா கண்ணில் ஆனந்தக் கண்ணீர். 6.20 குழந்தை வெளியே கொண்டு காண்பித்தனர். ஆண் குழந்தை. அப்படியே தன் அப்பாவை உரிச்சு வெச்சிருந்தது.

சுமார் 10 மணி மாமியார் வந்து சேர்ந்தாள். வருவதற்குள் 20 தடவை போன செய்திருப்பாள். அள்ளி எடுத்தாள் குழந்தையை. அவ்வளவு சந்தோஷம் அவள் முகத்தில். “சம்மந்தி பார்த்தீங்களா? என் பிள்ளை மாதிரியே இருக்கான். சரி சரி. நீங்க போய் குளிச்சுட்டு கொஞ்சம் துணி எடுத்துண்டு வாங்கோ. நான் இருக்கேன் இங்கே. அக்கா நீங்க பத்தியம் செய்றீங்கள, நான் செய்து கொண்டு வரட்டுமா?” மாமியார் பேசிக்கொண்டே இருந்தார். அத்தை – .”நான் செய்து கொண்டு வரேன். நீங்க இங்கே இருங்கோ” என்றாள். அக்காவும், தம்பியும் கிளம்பினர்.

சுமார் 11 மணிக்கு ஸ்ரீவித்யா கண் விழித்தாள். மாமியார் இருந்ததை பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “இந்தா ஸ்ரீவித்யா. பாரு என் பேரனை” என்று அவ்வளவு பாசத்தோடு காண்பித்தாள். கையால் குழந்தையை தொட்டாள்.

அங்கு, அத்தை தம்பியிடம், “இதோ பாரு. நான் 10 நாள் இருந்து பார்த்துக்கறேன். அங்கே உன் அத்திம்பருக்கு நான் இல்லைனா சரிப்படாது. அதான் அவ மாமியார் வந்துட்டால. அவ பார்த்துப்பா” கறாராய் பேசினாள் அக்கா.

அப்பாவிற்கு ஏதோ போல் ஆகிவிட்டது. குழந்தை இப்போதான் பிறந்திருக்கு என்ன அக்கா இப்படி பேசறா என்று மனம் கொஞ்சம் வருத்தப் பட்டது. “சரி. பார்க்கலாம் அக்கா”: சொல்லி விட்டு தன் வேலை பார்க்க சென்றார்.

மாமியார் ஸ்ரீவித்யாவிடம். “நீ கவலை படாதே. உன் நாத்தனாரை எங்க மாமா ஆத்துக்கு போக சொல்லிடறேன். ஒரு மாசம் இங்கே இருந்து கவனிச்சுக்கறேன். அப்புறம் முடிந்தால் மதுரை கிளம்புவோம். இல்லேன்னா இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருப்போம். அதான் ரெண்டு மாட்டுப் பெண்கள் இருக்காளே அவா வந்து அங்கே கவனிச்சுக்கட்டும்” கூறும் பொழுது அம்மா தோரணையில் பேசினாளே ஒழிய, மாமியார் வாடையே ஸ்ரீவித்யாவிற்கு தோணவில்லை. ஆச்சரியம்! “சரி மா. நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி பார்த்துக்கலாம்” என்று கூறி விட்டாள். எதையும் யோசிக்காமல். அம்மாவின் பாசத்தை இவள் அந்த நொடியில் உணர்ந்தாள்.

அப்பா வந்ததும் மாமியார் சென்று தானும் சாப்பிட்டுவிட்டு ஸ்ரீவித்யாவிற்கும் எடுத்துவர கிளம்பினாள். அப்பாவின் முகம் சற்று வருத்தமாய் இருப்பதை உணர்ந்த ஸ்ரீவித்யா

“என்ன ஆச்சுப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கே?” மிகவும் சக்தி இழந்து கேட்டாள். “இல்லைமா. அத்தை இங்கே வந்து ஒரு மாசமாவது இருந்து உன்னை பார்துப்பானு நினைச்சேன். அதனாலேதான் சம்மந்தி அம்மாகிட்டே கூட கொஞ்சம் அழுத்தமா பேசிட்டேன். இப்ப்போ,10 நாளைக்கு மேலே இருக்க முடியாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டா. அதான் என்ன பண்ணப்போறோம்னு யோசிச்சிருந்தேன்” சோகமாய் அப்பா பாசத்தில் பேசினார்.

“அப்பா கவலை படாதே. என் மாமியார் இங்கேயே இருந்து என்னையும் பேரனையும் பார்த்துக்கறேன்னு சொல்லிருக்கா” ஸ்ரீவித்யா முடிக்கும் முன்பே அப்பாவின் கண்கள் ஒளிபெருவதை உணர்ந்தாள்.

மனதால் நன்றி தெரிவித்துக்கொண்டாலும், சம்மந்தி வந்தவுடன் அவரிடம் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் அப்பா.

“என்ன நீங்க? இது நம்ம பேரன். நீங்க கவலை படாதீங்கோ” பாசத்தோடு சொன்ன மாமியாரை பெருமிதத்துடன் பார்த்தார் அப்பா.

Previous articleYour Child Is Your Reflection, So Practice What You Preach!
Next articleगर्भावस्था में इसे न करें नजरअंदाज